Tuesday, October 27, 2009

நீர்க்குமிழி

உருவமில்லாத ஒன்றால் உருவாகி
உலா வருவது
அமைதியாய் வந்து அமைதியாய்
அடங்குவது
மீனின் பேச்சுகளோ பாசியின் இடம்பெயர்வோ
என்று கிணற்றின் ஓரமாய்
என்னை யோசிக்க வைத்தது
கிணற்றை விழிக்கவைத்து
கனவாய் கரைவது
பாசிகளின் தூதுகளை
பகலவனுக்கு படைப்பது
ஆறுகளுக்கு கொலுசுகளே
இவைகள்தான்
சூரியனிடம் கடன்கொண்டு
வர்ணம் உடுத்துகின்றன
காற்று மிரட்டினால்
கரையிடம் புலம்புகின்றன
காலைவைத்தால் கண்ணீர்விட்டு
சாந்தமடைகின்றன
அழகோ அழகு இதன் பயணம்
மெல்ல மெல்ல மங்கை போல்
அசைந்து குறுநடனம் புரியும்
மீன்களை முத்தமிடும்
செடிகளைக் குளிப்பாட்டும்
சூரியனைச் சிறையிடும்
மிதப்பவனவிடம் மையல் கொள்ளும்

Monday, August 10, 2009

இந்த நதியின் பயணம் (முனைஞ்சிபட்டியில்)

இவன்
என்றென்றும் ஜீவநதி
ஆழிதேடா அற்புதநதி
இரண்டாண்டுகள் இப்பாலையில்
பாய்ந்ததில் பிறந்ததே
புதுப்புதுஅர்த்தங்களும் பூகம்பங்களும்
பறவைகளைத்தேடும் வேடந்தாங்கலாய்
கூட மாறியிருந்திருக்கலாம்
வெண்ணிலவு தேடி
நீலவானமாய் இருந்திருக்கலாம்
வார்த்தைக்கத்தியைத் தவறவிட்டு
தழும்புகள் வாங்கியிருந்திருக்கலாம்
சிலநேரம் அன்புகமண்டலங்களில்
அமைதியாய் அடங்கியிருந்திருக்கலாம்
தேவையற்று பொங்கும்
பிரம்மபுத்திராவாய் இருந்திருக்கலாம்
மொட்டைமாடியில் மணிக்கணக்கில்
விழிபிதும்ப புலம்பியகாலம்
திங்களிடம் தனிமையில்
தவிப்புடன் முறையிட்டகாலம்
எல்லாம் என்னைக்
கடந்துப் போய்விட்டன
நான் பெருக்கெடுத்து
என்வழியில் இழுத்ததில்லை
ஈர்க்க முயன்றிருக்கிறேன்
காலை இழுக்கும் முதலைமனம்
என்னுள் மலர்ந்ததில்லை
கவர்ந்திழுத்த கரையினை
அரிக்கமுயன்று அனுதினமும்
தோற்றிருந்திருக்கலாம்
கரையோடு என்மனமும்
நெளிந்தோடியிருந்திருக்கலாம்
புன்னகை கண்டு
பயணம் நின்றிருந்திருக்கலாம்
என்றோ நெஞ்சில்
புதைந்த டைட்டானிக்சுவடுகளை
ஒவ்வொரு பவுர்ணர்மியும் தட்டியெழுப்புகிறது
கோஹிநூர் வைரமாய் மின்ன
எந்த ஒளியையும் நாடியதில்லை
ஆனால் எத்தனையோ
புகார்கள்
எனதுஒட்டம் தவறானபாதையிலாம்
ஏன் பெருக்கெடுத்தால்
நதியின் பாதைமாறலாமல்லவா!
ஆனால் வறண்டுபோகவில்லை
கோபக்காரன்; கண்டிப்புக்காரன்
என்ற கட்டுமரங்களே
இதுவரை என்னுள் பயணித்தன
அன்புசெலுத்த என்கப்பல்கள்
தொடுவானம்தேடி புறப்பட்டுவிட்டன
என்னால் சிலருக்கு
நட்பு பூத்ததுண்டு
என்னால் எனக்கே
வெறுப்புப்பூத்ததுண்டு
ஓடையாயிருந்தவனை ஓர்நதியாக்கிய
என்னுயிர் நெஞ்சங்களே
என்றும் நினைவலைகளில் நீங்காத
ஓடங்களாய் நீங்கள்
அலைபாயும் நெஞ்சமுடன்
இவன் !!

Tuesday, August 4, 2009

இருண்டகாலம்

காக்காமுட்களைக் கடந்தவனை
ஒவ்வொரு நொடியிலும்
கைகடிகாரமுட்கள் குத்திக்
கையைப் பதம்பார்க்கின்றன

பௌணர்மி

இவள் நடந்தாலே
எங்கும்
முத்துக்கள் தெறிக்கின்றன
யாரது துணிவிரித்து அள்ள
முயலுவது முகில்களோ
ராக்கெட்டுக்களை வீசுவது
வால்மீன்களோ
மெல்ல மெல்ல நடை பயிலுவதைப்
பார்த்து இடி ஆனந்தக் கூச்சலிடுகின்றதோ
யார் திருஷ்டிப்பட்டதோ
இவள் கன்னத்தில் கரும்படலம் !!

Reynoulds changed என் அன்னை as

நகவெட்டிகள் தூங்குகின்றன
நகங்களைக் காணோம்
விரல்நுனிகள் அவிந்ததால்
ஆக்குவதை அறுதியிட இயலவில்லை
கடிக்க காலணியிருந்தும்
விரல்கள் ஒத்துழைக்கவில்லை
ஊட்டிய விரல்களில்
ஊனைக் காணோம்
ஓடிஓடி உழைத்தவளுக்கு
வலி ஓய்வளிக்கவில்லை
தவறிய சில்லறையை எடுக்க
குனிந்தவளுக்கு எடுத்துக் கொடுக்க
பூமித்தாய்க்கும் விரல்கள் இல்லையோ
இவள்
சில்வர்ஸ்பூனுடன் பிறக்கவில்லை
சில்வர்ஸ்பூன் பிறந்ததே இவளுக்குத்தான்!

Monday, August 3, 2009

தூக்க மாத்திரை

தூங்க வைக்க வந்தது
கடந்த கால நினைவுகளால்
தூங்கிப்போனது

மழை

பூத்த பூக்களுக்கு
மட்டும் நீராட்டு விழா அன்று
அவிழவிருக்கும் மொட்டுகளுக்கும் தான்

வெண்ணிலா

மோகன புன்னைகையோடு
பத்து பதினைந்து குழவிகளோடு பவனி வரும் பாவை