Monday, August 10, 2009

இந்த நதியின் பயணம் (முனைஞ்சிபட்டியில்)

இவன்
என்றென்றும் ஜீவநதி
ஆழிதேடா அற்புதநதி
இரண்டாண்டுகள் இப்பாலையில்
பாய்ந்ததில் பிறந்ததே
புதுப்புதுஅர்த்தங்களும் பூகம்பங்களும்
பறவைகளைத்தேடும் வேடந்தாங்கலாய்
கூட மாறியிருந்திருக்கலாம்
வெண்ணிலவு தேடி
நீலவானமாய் இருந்திருக்கலாம்
வார்த்தைக்கத்தியைத் தவறவிட்டு
தழும்புகள் வாங்கியிருந்திருக்கலாம்
சிலநேரம் அன்புகமண்டலங்களில்
அமைதியாய் அடங்கியிருந்திருக்கலாம்
தேவையற்று பொங்கும்
பிரம்மபுத்திராவாய் இருந்திருக்கலாம்
மொட்டைமாடியில் மணிக்கணக்கில்
விழிபிதும்ப புலம்பியகாலம்
திங்களிடம் தனிமையில்
தவிப்புடன் முறையிட்டகாலம்
எல்லாம் என்னைக்
கடந்துப் போய்விட்டன
நான் பெருக்கெடுத்து
என்வழியில் இழுத்ததில்லை
ஈர்க்க முயன்றிருக்கிறேன்
காலை இழுக்கும் முதலைமனம்
என்னுள் மலர்ந்ததில்லை
கவர்ந்திழுத்த கரையினை
அரிக்கமுயன்று அனுதினமும்
தோற்றிருந்திருக்கலாம்
கரையோடு என்மனமும்
நெளிந்தோடியிருந்திருக்கலாம்
புன்னகை கண்டு
பயணம் நின்றிருந்திருக்கலாம்
என்றோ நெஞ்சில்
புதைந்த டைட்டானிக்சுவடுகளை
ஒவ்வொரு பவுர்ணர்மியும் தட்டியெழுப்புகிறது
கோஹிநூர் வைரமாய் மின்ன
எந்த ஒளியையும் நாடியதில்லை
ஆனால் எத்தனையோ
புகார்கள்
எனதுஒட்டம் தவறானபாதையிலாம்
ஏன் பெருக்கெடுத்தால்
நதியின் பாதைமாறலாமல்லவா!
ஆனால் வறண்டுபோகவில்லை
கோபக்காரன்; கண்டிப்புக்காரன்
என்ற கட்டுமரங்களே
இதுவரை என்னுள் பயணித்தன
அன்புசெலுத்த என்கப்பல்கள்
தொடுவானம்தேடி புறப்பட்டுவிட்டன
என்னால் சிலருக்கு
நட்பு பூத்ததுண்டு
என்னால் எனக்கே
வெறுப்புப்பூத்ததுண்டு
ஓடையாயிருந்தவனை ஓர்நதியாக்கிய
என்னுயிர் நெஞ்சங்களே
என்றும் நினைவலைகளில் நீங்காத
ஓடங்களாய் நீங்கள்
அலைபாயும் நெஞ்சமுடன்
இவன் !!

3 comments:

உங்கள் விமர்சனங்களை இங்கே விதைக்கலாம் !